தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1994

In தலைவரின் மாவீரர் நாள் உரைகள்

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1994.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்றைய நாள் மாவீரர் நாள்.

இன்றைய நாளை நாம் எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம்.

எமது தேசம் விடுதலை பெற வேண்டும்; எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக் கோவிலில் பூசிக்கும் புனித நாள்.

உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.

விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.

தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீர மரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது; அடிமைத்தனத்தின அமைதியைக் குலைத்துக்கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன், மலையாக எழுந்து நிமிர்ந்தான்; அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.

எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.

விடுதலைக்காக, எமது தேசம் மதிப்பிட முடியாத பெருவிலையைக் கொடுத்திருக்கிறது; விடுதலைக்காக, இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடியிருக்கிறது; விடுதலைக்காக, இந்த பூமி ரணகளமாக மாறியிருக்கிறது; விடுதலைக்காக, எமது வீரர்கள் இன்றும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.

விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை; வரலாறுதான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளிக்கிறது; சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை; ஓயாத புயலாக வீசிய ஒடுக்குமுறையின் கோரத்தாண்டவம் விடுதலைப் பாதையில் எம்மைத் தள்ளிவிட்டது. இன அழிப்பின் தாங்கமுடியாத நெருக்கு வாரங்களின் விளைவாக, நாம் ஒரு விதி செய்துகொண்டோம்; எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கத் தீர்மானித்தோம்; விடுதலை பெற்ற மனிதர்களாக வாழ்வதற்கு நாம் முடிவு செய்துகொண்டோம். விடுதலை நோக்கிய எமது இலட்சிய பயணம் ஆரம்பமாகி நீண்ட காலம் ஆகின்றது.

இந்த நீண்ட பயணத்தில் நாம் எத்தனையோ சவால்களையும், சோதனைகளையும் சந்தித்துவிட்டொம். எத்தனையோ சக்திகள் எமக்கு எதிராக கிளர்ந்தன. எமது வல்லமைக்கு மீஞ்சிய வல்லாதிக்க சக்திகளும் எமக்கு விரோதமாக எழுந்தன. எமது பாதைக்கு முன்னே பாரிய முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. எமது பாதையிலிருந்து எம்மை திசைதிருப்ப எத்தனையோ சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. போகும் வழியெல்லாம் பொறிகள் வைக்கப்பட்டன. சமாதான சதிவலையில் நாம் சிக்கிவிட மறுத்தபோது போர் என்ற பூதம் எம்மீது ஏவப்பட்டது. நாம் உறுதி தளராது நின்றோம். பாதை விலகாது பயணத்தை தொடர்ந்தோம்.

நீண்ட காலமாக எமது இலட்சிய உறுதியுடன் மோதியவர்கள் இன்று தோல்வியை சந்தித்து நிற்கின்றனர். சிங்கள பேரினவாத அரசியலும் இன்று ஆட்டங்கண்டு நிற்கிறது. உறுதியான ஒரு போராட்ட சக்தியை எத்தகைய பலத்தாலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை, இன்று சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ளது. இந்த விழிப்புணர்வால் தென்னிலங்கையில் பெரியதொரு அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது; புதிய ஆணையுடன், புதிய அணுகுமுறையுடன் புதிய அரசு ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது.

சந்திரிகா அரசு சமாதானக் கரத்தை நீட்டியபொழுது, நட்புறவுடன் நாம் அதைப் பற்றிக்கொண்டோம்; நிபந்தனைகள் எதையும் விதிக்காமல், நிர்பந்தங்கள் போடாமல் நாம் பேச்சுவார்தையில் பங்குபற்றினோம். முதற் கட்டமாகத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, நாம் எமது மக்களின் நலன்களுக்கே முதன்மை கொடுத்தோம். முடிவில்லாமல் தொடர்ந்த அரச வன்முறை எமது தேசத்தின் முகத்தைச் சிதைத்துவிட்டது; சாவும் அழிவும், எண்ணில்லா இன்னல்களும், குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக எமது மக்களின் அன்றாட சீவியம் பெரும் அவலமாக மாறியது; சாதாரண வாழ்வின் தேவைகள்கூட எமது மக்களுக்கு மறுக்கப்பட்டது. இயல்பான வாழ்விற்கு ஏதுவான எல்லாவற்றிற்குமே தடைகள் விதிக்கப்பட்டன் இதனால், எமது மக்களின் அன்றாட வாழ்க்கை ஒரு ஜீவ மரணப் போராட்டமாக மாறியது.

பூதாகரமாக வளர்ந்துநிற்கும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முதற்படியாக தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்பதை, பேச்சுக்களின்போது நாம் வலியுறுத்தினோம். சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ச்சியாக இழைத்துவந்த கொடுமைகளுக்கு புதிய அரசு முதலில் பரிகாரம் காணவேண்டும்; தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளை ஆராய்வதற்கு முன்னராக, எமது மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும்; சமாதான சூழ்நிலையை உருவாக்கி, தமிழர் மீதான தடைகளை நீக்கி, பொருளாதார வாழ்வைச் சீரமைத்து, இயல்பு நிலையைத் தோற்றுவிக்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கு சந்திரிகா அரசு, இன்னும் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொருளாதாரத் தடையை முற்றாக நீக்கிவிடவோ, போக்குவரத்துப் பாதையைத் திறந்துவிடவோ அரசாங்கம் தயாராக இல்லை. இது ஒருபுறமிருக்க, இராணுவம் போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துகிறது; யுத்தத் தயாரிப்பு வேலைகளை தீவிரமாகச் செய்துவருகிறது; நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது. சமாதானம் பற்றிப் பேசிக்கொண்ட பொழுதும் இராணுவத்தின் கரங்களைப் பலப்படுத்துவதிலேயே சந்திரிகா அரசு அக்கறை காட்டிவருகிறது.

தமிழர் பிரச்சினைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காண்பதை, சிங்கள இராணுவம் விரும்புவதாகத் தெரியவில்லை. இராணுவத்தின் விட்டுக்கொடாத கடும் போக்கும், போர் நடவடிக்கைகளும், யுத்தத் தயாரிப்பு வேலைகளும் இந்த உண்மையையே எடுத்துக் காட்டுகின்றன. சந்திரிகா அரசும் இராணுவ அணுகுமுறையைக் கைவிட்டதாகத் தெரியலில்லை; இராணுவத்தின் இறுக்கமான நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயற்படுவதையும் அரசு விரும்பவில்லை; இராணுவத்திற்கு எவ்வித அழுத்தம் போடுவதற்கும் தயாராக இல்லை. இப்படியான ஒரு நிலைமையில், சமாதான சூழ்நிலையோ இயல்பு நிலையோ ஏற்படுவது இலகுவான காரியமல்ல.

இன்றைய நிலைமையில், சகல ஆட்சி அதிகாரங்களும் சந்திரிகா அரசிடம் கைமாறியிருக்கும் சூழ்நிலையில், அரசு வேறு ஆயுதப் படைகள் வேறு என்றோ, அல்லது அரசின் நிலைப்பாடு வேறு ஆயுதப் படைகளின் போக்கு வேறு என்றோ, பாகுபடுத்திப் பார்ப்பது தவறு. ஆயுதப் படைகள் அரசின் ஒரு அங்கம்; அரசின் நிலைப்பாட்டையே ஆயுதப்படைகள் பிரதிபலிக்கின்றன என்றே நாம் கருதவேண்டும். எனவே, அரசுக்கு சமாதானப் பாதையில் உண்மையான, நேர்மையான அக்கறை இருக்குமானால் ஆயுதப் படைகளையும் அந்த வழிக்கு இட்டுச்செல்வது சிரமமாக இருக்க முடியாது.

போர் நடவடிக்கைகளை நிறுத்துவதும், பொருளாதாரத் தடைகளை நீக்குவதும், போக்குவரத்துப் பாதையைத் திறப்பதும், கடல் வலயத் தடையை நீக்குவதும், அகதிகளை மீளக் குடியமர்த்துவதும் எல்லாமே ஆயுதப் படையினரின் நிலைப்பாட்டில் தங்கியிருக்கின்றன. ஆயுதப் படையினர் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தால், அரசும் அதற்கு உடந்தையாக இருந்தால், எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குப் பேச்சுமூலம் தீர்வு ஏற்படுவது சாத்தியமில்லை. எமது மக்கள் இன்று எதிர் கொண்டுநிற்கும் சாதாரண பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது போனால், மிகவும் சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை அரசினால் தீர்த்து வைக்க முடியுமா என்பது, சந்தேகத்திற்கு இடமானதே.

நாம் சமாதானத்தின் பாதைக்கு இடையூறாக நிற்கவில்லை; நாம் சமாதானத்தின் கதவுகளைச் சாத்திவிடவும் இல்லை நாம் சமாதானப் பேச்சுகளுக்குத் தயாராகவே இருக்கிறோம்; பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடமானால் நாம் அதில் பங்குகொள்வோம்.

எமது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையே, நாம் விரும்புகிறோம். எமது மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் பெறுவதானால், சந்திரிகா அரசு, முதற் கட்டமாக எமது மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தமிழர் தாயகத்தில் சமாதான சூழலையும் இயல்பு நிலையையும் தோற்றுவிக்க வேண்டும்.

தமிழரின் தேசியப் போராட்டம் நாற்பது ஆண்டு காலத்திற்கு மேலான நீண்ட, சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலைகளால் உருவாக்கம் பெற்றுப் பெருவளர்ச்சி கண்டிருக்கிறது. இன்று அதன் பரிமாணம் வேறு வடிவம் வேறு. நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இன்று தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புகளை நிறுவும் அளவிற்குப் போராட்டத்தை உயர்ந்த படிநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று நாம் மிகவும் பலமான, உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இந்த வலுவான அத்திவாரத்தை இட்டுத்தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் ஒரு பலமான சக்தியாக வலுவான தளத்தில் நிற்பதால்தான், சிங்கள அரசு எம்முடன் பேச்சுக்களை நடத்த விரும்புகிறது.

சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சந்திரிகா அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழற்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற்கொண்டு, உருப்படியான சுயாட்சித் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனைசெய்யத் தயாராக இருக்கிறோம்.

எனது அன்பார்ந்த தமிழ் மக்களே!

நாம் விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்கள் தேசம். நாம் சலுகைகளுக்காகக் கைநீட்டி நிற்கும் ஒரு சாதாரண கூட்டமல்ல எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனையோ அழிவுகளைச் சந்தித்து, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து, எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, எத்தiயோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, நாம் எமது போராட்டத்தை எமது இலட்சியப் பாதையில் முன்னகர்த்தி வருகிறோம். நாம் சிந்திய இரத்தமும் கண்ணீரும் வீண்போவில்லை; இன்று எமது போராட்டம் தன்னாட்சியை நோக்கி வளர்ச்சியும் உயர்ச்சியும் கண்டுவருகிறது. ஒரு தொடர்ச்சியான உறுதியான போராட்டத்தின் மூலமே நாம் இந்தக் கட்டத்தை எட்டிவிட முடிந்தது.

எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள்; இதுவே எமது தேசத்தின் அபிலாசை. இந்தத் தேசிய அபிலாசையை நிறைவு செய்யும் ஒரு தீர்வயே நாம் வேண்டி நிற்கிறோம். அந்தத் தீர்வே நிரந்தரத் தீர்வாக அமையும்; அந்தத் தீர்வே நிரந்தரமான சமாதானத்தையும் தோற்றுவிக்கும். அந்தத் தீர்வு எமக்குக் கிட்டும்வரை, நாம் ஒன்றுபட்ட மக்களாக, ஒன்றுதிரண்ட தேசமாக, தளராத உறுதியுடன் இருக்க வேண்டும்.

இன்றைய தேசிய நாளில், எமது தேசத்தின் விடுதலைக்காக மரணித்த எமது மாவீரர்களை நாம் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இந்தப் புனித நாளில், நாம் எமது குறிக்கோளை உறுதியாகப் பற்றிக்கொள்வோமென உறுதிமொழி செய்வோம்.

சுதந்திரத்தின் ஆலயங்களான துயிலும் இல்லங்களில் ஈகத்தின் சுடரொளிகளை நாம் ஏற்றிவைக்கும் பொழுது, அந்த அற்புதமானவர்களின் ஆன்ம அபிலாசைக்கு நாம் செலுத்தும் காணிக்கையாக, இந்த உறுதிமொழியை நாம் செய்துகொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.